

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதையின் தாக்கத்தால், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி சென்னையில் நேற்று மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்களின் சேவை தாமதமானது. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
இதற்கிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது