

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பெய்த திடீர் கனமழையால் மீன் விற்பனை பாதிப்படைந்து, மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. பாம்பன் தெற்குகடற்கரை மற்றும் வடக்குகடற்கரை மீன் இறங்குதளங்களில் இந்த திடீர் மழையின் காரணமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திறந்தவெளியில் வழக்கமாக நடைபெறும் மீன் ஏலம் மற்றும் சில்லறை விற்பனை முற்றிலுமாக முடங்கியது.
கனமழை காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மீன்களை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் மீனவர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே பெய்த இந்த திடீர் மழையால், மீன்களின் விலை சரிவடைந்ததோடு, போதிய வியாபாரம் இல்லாததால் மீனவர்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். பருவமழை முழுமையாகத் தொடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.