இலங்கைக்கு சென்ற விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதி கேட்டனர்.
விமானம்
Published on

ஆலந்தூர்,

வியட்நாம் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அவசர மாக தரையிறக்கப்பட்டதால் 143 பேர் உயிர் தப்பினர்.

விமானம்

வியட்நாம் நாட்டில் உள்ள ஹோ சீ மின் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு நேற்று முன்தினம் மாலை வியட் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் விமான ஊழியர்கள் உள்பட 143 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் இலங்கை நோக்கி பறந்து கொண்டு இருந்தது.

சென்னை அருகே நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் ஒரு எந்திரம் திடீரென பழுதடைந்து. செயல்படாத நிலை ஏற்பட்டது. விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த விமானிகள், அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதி கேட்டனர்.

143 பேர் உயிர் தப்பினர்

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்து, இரவு 10.30 மணி அளவில் விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், விமானம் இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

பின்னர் பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் பழுதடைந்த விமானத்தின் எந்திரங்களை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எந்திர கோளாறை சரி செய்த பின் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 143 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com