மயிலாடுதுறையில் திடீர் மழையால் பயிர்கள் பாதிப்பு; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் மழையால் 20,000 ஏக்கர் குறுவை பயிர்கள் பாதிப்படைந்தன.
மயிலாடுதுறையில் திடீர் மழையால் பயிர்கள் பாதிப்பு; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் மழையால் 20,000 ஏக்கர் குறுவை பயிர்கள் பாதிப்படைந்தன. இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், 

"மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் மழையால் 20,000 ஏக்கரில் குறுவை பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்!!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டன. உடனடியாக மழை நீர் வடியாவிட்டால் நெற்பயிர்கள் அழுகி விடும் ஆபத்து இருப்பதாக உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே, நிலத்தடி நீரின் உதவியுடன், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் அறுவடை செய்யப்படும் சூழலில், மழையால் பயிர்கள் சேதமடைந்ததை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீரால் பயிர்கள் சேதமடைந்திருப்பது பெரும் சோகம்.

நடப்பாண்டில் பாசனம், இடுபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் உழவர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருந்ததால், நெல்லுக்கான உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவாகியிருப்பதாக உழவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. என்.எல்.சி விவகாரத்தில் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அதனடிப்படையில், மயிலாடுதுறையில் மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

அதேபோல், கடலூர் மாவட்டம் தாழநல்லூர், வெண்கரும்பூர் ஆகிய பகுதிகளில் விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. ஈரப்பத விதிகளைத் தளர்த்தி, அந்த நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்யும்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்."  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com