

சென்னை,
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. காரில் 2 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் கிரேன் உதவி மூலம் பள்ளத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வந்தனர். காரில் பயணம் செய்த 2 பேரும் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருக்கும் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பள்ளம் உருவான காரணங்களை விசாரித்து வருகின்றனர். இந்த பள்ளம் இன்று இரவுக்குள் சரிசெய்யப்படும் எனவும், பாதை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.