சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை - அரக்கோணம் அருகே பரபரப்பு


சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை - அரக்கோணம் அருகே பரபரப்பு
x

ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி அலறியடித்துக்கொண்டு இறங்கினர்.

ராணிப்பேட்டை

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் காட்பாடியை கடந்து அரக்கோணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 8.20 மணியளவில் மேல்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் வந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த ஒரு ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனடியாக அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் நின்றதும் அவர்கள் ரெயில் பெட்டியில் இருந்து அலறியடித்துக்கொண்டு இறங்கினர். தகவல் அறிந்ததும் மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயணைப்பான் கருவி மூலம் ஏ.சி. பெட்டியில் இருந்து வந்த புகையை கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து புகை வந்ததற்கான காரணம் குறித்து சோதனை செய்தபோது சக்கரங்களில் ஏற்பட்ட பிரேக் அழுத்த ஏற்ற இறக்கத்தின் காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் பிரேக் அழுத்தத்தை சரி செய்தனர். ரெயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிய வந்ததையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனை தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக ரெயில் அரக்கோணத்தை நோக்கி புறப்பட்டு சென்றது.

1 More update

Next Story