விளாத்திகுளம் அருகே உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனங்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
விளாத்திகுளம் அருகே உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
Published on

எட்டயபுரம், அக்.8-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார், கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன்குளம் ஆகிய கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக உப்பளம் அமைத்து உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன்குளம் கிராமங்களில் உள்ள உப்பள நிலங்களை சிப்காட் நிர்வாகம் பல்வேறு கார்பரேட் நிறுவனங்களுக்கு தொழில் செய்வதற்கு ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த கிராம மக்கள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை என்றும், உப்பள நிலங்களை தவிர்த்து உபயோகத்தில் இல்லாத வேறு நிலங்களை சிப்காட் நிர்வாகம் தொழில் நிறுவனங்களுக்கு கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி கடந்த 2020-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிப்காட் நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தி விட்டதாகவும், எனவே உப்பளங்களை காலி செய்து தர வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உப்பளங்களில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிப்காட் அதிகாரிகள் நேற்று கலைஞானபுரம் கிராமத்துக்கு வந்து தனியார் நிறுவனங்களுக்கு இடத்தை அடையாளம் காண்பித்து ஒப்படைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன்குளம் கிராம மக்கள் ஊர் தலைவர் முனியசாமி தலைமையில் உப்பள வழித்தடங்களில் அமர்ந்து சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com