நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடீர் திருப்பம் : திமுக பெண் பிரமுகரிடம் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மாவட்ட திமுக மகளிர் அணி துணை செயலாளராக உள்ள சீனியம்மாளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடீர் திருப்பம் : திமுக பெண் பிரமுகரிடம் விசாரணை
Published on

நெல்லை

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் உள்ள தடயங்களை யாராவது அழித்துவிடக்கூடும் என்பதால் வீட்டிற்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வீடு போலீசாரின் கட்டுப்பாட்டில் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.

3 பேரை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பலை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பெண் மேயர் கொலையில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்த கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி உமா மகேசுவரி பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில் கொலை நடைபெற்றதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சீனியம்மாள் மாவட்ட திமுக மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com