6 வயது சிறுவன் மர்மச்சாவில் திடீர் திருப்பம்: தாயே கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் அம்பலம்

6 வயது சிறுவன் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக சிறுவனின் தாயே கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் அம்பலமானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வீர செல்வம். டாஸ்மாக் பார் ஊழியரான இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், கிருஷ்ணன் (6 வயது), மித்திரன் என இரண்டு மகன்களும் இருந்தனர். எல்.கே.ஜி. படித்து வந்த கிருஷ்ணன், கடந்த 3-ந்தேதி காலை நீண்ட நேரமாகியும் தூக்கத்தில் இருந்து எழவில்லை.

உடனடியாக வீர செல்வம் தனது மகனை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், 'கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்தார்' என தெரிய வந்தது. இதையடுத்து, வியாசர்பாடி போலீசார் கொலை வழக்காக மாற்றி, தாய் சிவரஞ்சனியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவை வருமாறு:-

கடந்த 2-ந்தேதி இரவு கிருஷ்ணன் தனது தம்பி மித்திரனின் கழுத்தில் இருந்த சாமி கயிற்றை பிடித்து இறுக்கி விளையாடி உள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சிவரஞ்சனி, தம்பிக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்த்துவதற்காக தனது மூத்த மகனான கிருஷ்ணனின் கழுத்தில் துப்பட்டாவை போட்டு விளையாட்டுத்தனமாக இறுக்கியுள்ளார்.

கிருஷ்ணன் லேசான மயக்க நிலையில் இருந்ததை பார்த்ததும் அப்படியே கட்டிலில் படுக்க வைத்துள்ளார். மறுநாள் காலையில் மகன் இறந்ததை அறிந்ததும் அதை மறைத்து நாடகம் ஆடி உள்ளார். இந்த நிலையில் மகனை கொன்ற சிவரஞ்சனியை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com