சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பெறும் வகையில், சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்திருக்கும் நிலுவைத் தொகைகளை வழங்க வசதியாக சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை டன்னுக்கு ரூ.2000 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இது விவசாயிகளின் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்த்து விடாது என்ற போதிலும், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு உதவும்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 12 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.240 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான விலையை முறையாக வழங்காமல் பாக்கி வைக்கும் வழக்கத்தை சர்க்கரை ஆலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாக்கியுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு நிலுவைத் தொகையின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் நோக்கத்துடன் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ள நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலை நிர்வாகங்கள் இனியும் இழுத்தடிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை சிக்கலுக்கு உடனே தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே, சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாகவோ, அடுத்த அரவைப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக சில தவணைகளிலோ வழங்க ஆலைகளுக்கு அரசு அழுத்தம் தர வேண்டும். அடுத்த சில மாதங்களில் அனைத்து விவசாயிகளுக்கு நிலுவை முழுமையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com