சர்க்கரை, புளி, உளுந்தம் பருப்பு விலை உயர்வு: விளைச்சல் அதிகரிப்பால் அரிசி, நாட்டுப் பூண்டு விலை குறைந்தது

விளைச்சல் அதிகரிப்பால் அரிசி, நாட்டுப் பூண்டு விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை, புளி, உளுந்தம் பருப்பு விலை உயர்ந்துள்ளது.
சர்க்கரை, புளி, உளுந்தம் பருப்பு விலை உயர்வு: விளைச்சல் அதிகரிப்பால் அரிசி, நாட்டுப் பூண்டு விலை குறைந்தது
Published on

சென்னை,

கரும்பு விளைச்சல் அமோகமாக இருந்ததால், சர்க்கரை உற்பத்தி அதிகரித்து, கடந்த மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.32 என்ற அளவுக்கு விலை குறைந்தது. ஆனால், சர்க்கரை மீது மத்திய அரசு புதிய வரி விதித்துள்ளதால், இந்த மாதம் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ.40 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகும் உளுந்தம் பருப்பு விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.70-க்கு விற்பனையான ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.78 ஆக உயர்ந்துள்ளது. பர்மா உளுந்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.48-ல் இருந்து ரூ.53 ஆக விலை கூடியுள்ளது.

அதே நேரத்தில், துவரம் பருப்பு விலை குறைந்து வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு முதல் ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.70 ஆகவும், 2-வது ரகம் ரூ.60-ல் இருந்து ரூ.55 ஆகவும் விலை சரிந்துள்ளது.

நாட்டுப் பூண்டு விளைச்சல் இந்த ஆண்டு குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருந்துள்ளது. அதனால், நாட்டுப் பூண்டு விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட முதல்ரக நாட்டுப் பூண்டு தற்போது ரூ.55 ஆக விலை சரிந்துள்ளது. 2-வது ரகம் ஒரு கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.30 ஆக அதிரடியாக விலை குறைந்துள்ளது.

அதேபோல், காய்ந்த மிளகாய் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.280-க்கு விற்பனையான முதல் ரக காய்ந்த மிளகாய் (குண்டு) ஒரு கிலோ தற்போது ரூ.220 ஆக சரிந்துள்ளது. 2-வது ரக காய்ந்த மிளகாய் (குண்டு) ரூ.250-ல் இருந்து ரூ.180 ஆக விலை குறைந்துள்ளது. காய்ந்த மிளகாய் (நீட்டு) ஒரு கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.100 ஆக விலை சரிந்துள்ளது.

அதேநேரத்தில், இந்த ஆண்டு கர்நாடகாவில் புளி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனையான ஒரு கிலோ புளி (முதல் ரகம்) தற்போது ரூ.200 ஆகவும், ரூ.100-க்கு விற்பனையான 2-வது ரக புளி ரூ.150 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல், பாமாயில் விலையும் ஒரு லிட்டர் ரூ.68-ல் இருந்து ரூ.72 ஆகவும், சன்பிளவர் ஆயில் முதல் ரகம் ரூ.84-ல் இருந்து ரூ.89 ஆகவும், 2-வது ரகம் ரூ.78-ல் இருந்து ரூ.83 ஆகவும் விலை கூடியுள்ளது. இறக்குமதி வரி உயர்வால், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து தினமும் 400 லாரிகளில் தமிழகத்திற்கு நெல் வரத்து உள்ளது. இதற்கு முன்பு தினமும் 100 லாரிகள் அளவுக்குத்தான் நெல் வரத்து இருக்கும்.

இதன் காரணமாக, அரிசி வகைகள் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் கோ-51 என்ற மோட்டா ரக அரிசி 25 கிலோ மூட்டை முதல் ரகம் ரூ.800-க்கு விற்பனையானது. தற்போது, அது ரூ.700 ஆக விலை குறைந்துள்ளது. 2-வது ரக மோட்டா அரிசி ரூ.750-ல் இருந்து ரூ.650 ஆக விலை சரிந்துள்ளது.

அதேபோல், ரூபாளி பொன்னி அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.800-ல் இருந்து ரூ.700 ஆகவும், அதிசய பொன்னி ரூ.900-ல் இருந்து ரூ.800 ஆகவும், பாபட்லா பொன்னி முதல் ரகம் ரூ.1,100-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், 2-வது ரகம் ரூ.1,000-ல் இருந்து ரூ.900 ஆகவும், வெள்ளை பொன்னி ரூ.1,300-ல் இருந்து ரூ.1,180 ஆகவும், இட்லி அரிசி முதல் ரகம் ரூ.800-ல் இருந்து ரூ.700 ஆகவும், 2-வது ரகம் ரூ.750-ல் இருந்து ரூ.650 ஆகவும், பொன்னி பச்சரிசி (புதியது) ரூ.1,100-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், பொன்னி பச்சரிசி (பழையது) ரூ.1,300-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் விலை குறைந்துள்ளது.

நெல் வரத்து இன்னும் அதிகமாக வந்து கொண்டிருப்பதால், வரும் மாதங்களில் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com