

பரமத்திவேலூர்
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). இவர் ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (49). இவர்களுக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சீரங்கனுக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தனது மனைவியிடம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இந்த நிலையில் சீரங்கன் தனது மருமகன் அருண்பாண்டியனுக்கு போன் செய்து வீட்டிற்கு அருகில் உள்ள ஊஞ்சகாட்டில் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற அருண்பாண்டியன், மயங்கி கிடந்த சீரங்கனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சை பெற்று வந்த சீரங்கன் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீரங்கனின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.