வரதட்சணை கொடுமையால் தற்கொலை: ரிதன்யாவின் பெற்றோர் விசாரணைக்குழு முன்ஆஜர்

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
வரதட்சணை கொடுமையால் தற்கொலை: ரிதன்யாவின் பெற்றோர் விசாரணைக்குழு முன்ஆஜர்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா (வயது 27). வரதட்சணை கொடுமையால் இவர் திருமணமான 78 நாட்களில், அதாவது கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும், தற்கொலைக்கு தனது கணவர் மற்றும் கணவரின் பெற்றோர் தான் காரணம் என்று கூறி, தந்தைக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருந்தார். ரிதன்யாவின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியது.

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதையொட்டி, நேற்று விசாரணை நடத்த, சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு அந்த குழுவினர் விசாரணையை தொடங்கினர்.

இந்த குழுவினரின் முன்பு ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள் நேற்று ஆஜர் ஆகினர். அப்போது ரிதன்யாவின் தற்கொலை, வரதட்சணை கொடுமை தொடர்பாக உங்களிடம் உள்ள ஆதாரங்களை வழங்குங்கள் என்று சமூக நலத்துறை குழுவினர் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். அந்த ஆதாரங்களுடன் நாளை (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு விசாரணை குழுவினர் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து ரிதன்யாவின் பெற்றோர், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com