செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

சேந்தமங்கலம் அருகே செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
Published on

சேந்தமங்கலம்

கூலித்தொழிலாளி

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, (வயது 53). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இவருக்கும், இவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சேந்தமங்கலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்தநிலையில் அந்த வழக்கின் முடிவு தாமதமாகி வருவதாகவும், அதனால் அண்ணாதுரை மன வேதனைக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சேந்தமங்கலம் வந்த அவர் நீதிமன்றம் அருகில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

தற்கொலை மிரட்டல்

இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதேபோல நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றிருந்த அண்ணாதுரையை பத்திரமாக மீட்டனர். அதைத் தொடர்ந்து அண்ணாதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வழக்கு நடைபெறும் பட்சத்தில் தமக்கு இலவசமாக வாதாட வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். சேந்தமங்கலம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com