கோடை விழா: ஏற்காட்டிற்கு நாளை முதல் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்


கோடை விழா: ஏற்காட்டிற்கு நாளை முதல் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 15 May 2025 11:47 AM IST (Updated: 15 May 2025 12:44 PM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு பேக்கேஜ் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம்,

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வருகிற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்குகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேக்கேஜ் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்சுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக மற்றொரு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8 மணி மற்றும் 8.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த பேக்கேஜ் சிறப்பு பஸ்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு களித்துவிட்டு மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு பேக்கேஜ் பஸ் நிறைவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பஸ்சில் பயணம் செய்வதற்கு ஒரு பயணிக்கு ரூ.300-ம், சிறுவர்களுக்கு அரை கட்டணமாக ரூ.150-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையத்திலும், www.tnstc.inஎன்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, கோடை விழாவை முன்னிட்டு சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேக்கேஜ் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம் என்று சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story