ஏற்காட்டில் கோடை விழா-மலர்க்கண்காட்சி இன்று தொடக்கம்

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காட்டில் கோடை விழா-மலர்க்கண்காட்சி
இன்று தொடக்கம்
Published on

ஏற்காடு,

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை 7 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த ஏற்காடு நகரமும் புதுப்பொலிவு பெற்று விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வண்ண மயமான நவீன அலங்கார மின் விளக்குகளால் நகரம் முழுமையாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஏற்காடு நகரின் முக்கிய அடையாளங்களான அண்ணா பூங்கா, ஏரிச்சாலை. படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் பகுதி மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் ஆபத்தான மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகள் என அனைத்து பகுதிகளிலும் விதவிதமான எல்.இ.டி. மற்றும் லேசர் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் இந்த விளக்குகள் அனைத்தும் ஒளிர விடப்பட்ட போது, ஒட்டுமொத்த ஏற்காடு நகரமும், மலையும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. அடர்ந்த பனி மூட்டத்திற்கும், இதமான குளுமையான வானிலைக்கும் நடுவே, இந்த மின் விளக்குகளின் வெளிச்சம் ஊடுருவிச் செல்வது, தரை உலகிற்கு வந்த ஒரு நிஜ விண்ணுலகம் போன்றதொரு கண்கொள்ளாக் காட்சியாக ஒளிர்ந்தது. மலையின் உச்சியில் இருந்து பார்க்கும்போது, வானில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் தரையில் இறங்கி வந்து தஞ்சம் புகுந்தது போன்ற ஒரு அற்புதமான மாயாஜால உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது.

இதை கண்டு ரசிப்பதற்காகவும். லட்சக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு பிரமாண்டமான உருவ அமைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சியின் அழகை நேரில் காண்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள், மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஏற்காட்டின் அழகிய பின்னணியில் தங்களது குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் மற்றும் நண்பர்களுடனும் நின்று கேமராக்கள் மற்றும் செல்போன்கள் மூலம் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து, தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களிலும் ஏற்காட்டின் அழகு வைரலாகி வருகிறது.

இந்த 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் பொதுமக்களையும் கவரும் வகையில் தினந்தோறும் மாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கண்கவர் பரதநாட்டியம் மற்றும் நவீன நடனப்போட்டிகள், நாய் கண்காட்சி, படகு போட்டிகள், மலையேற்றப் போட்டிகள், சமையல் போட்டிகள், கோலப் போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சாதனை விளக்கக் கண்காட்சிகளும் விரிவான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com