ஏலகிரி மலையில் நாளை கோடை விழா

ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது
ஏலகிரி மலையில் நாளை கோடை விழா
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. திருப்பத்தூரில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ. தூரத்திலும், பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தூரத்திலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் அமைந்துள்ளது.

ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ. ஆகும். இங்கு இயற்கைப்பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் கோவில், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும். எப்பொழுதும் ஒரே சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், ஏலகிரி மலையில் நாளை கோடை விழா நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து நாளை ( ஜூன் 29) ஒருநாள் மட்டும் கோடை விழா நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விழா காலை 10.30 மணியிலிருந்து ஏலகிரியில் உள்ள கோடை விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் போது இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா குறித்த கண்காட்சி, மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவை கண்காட்சியாகவும், விற்பனையாகவும் நடைபெறவுள்ளது.

பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இயற்கை எழில் மிக்க ஏலகிரி மலையில் நடத்தப்படும் இந்த விழா, சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தையும் பொருட்படுத்தி ஒருநாள் மட்டுமே நடத்தப்படும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அழைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com