கோடை விடுமுறை: ஊட்டி மலை ரெயிலில் செல்ல அலைமோதும் பயணிகள்

ஊட்டி மலை ரெயிலில் பயணிப்பதற்கான காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 கோடை விடுமுறை: ஊட்டி மலை ரெயிலில் செல்ல அலைமோதும் பயணிகள்
Published on

குன்னூர்,

நீலகிரியில் கோடை சீசனை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.அவர்களில் பெரும்பாலானோர் மலை ரெயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி, கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அந்த மலை ரெயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் பயணித்து அங்குள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு களித்து திரும்புகின்றனர். ஊட்டி மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோடை சீசனை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு மலை ரெயிலில் பயணிக்க அடுத்த மாதம் 15-ந்தேதிவரை முன்பதிவு செய்யலாம் என்று தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இதனால் பயணிகள் வேறு வழியின்றி டிக்கெட் எடுத்து கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்காக காத்துக்கொண்டு உள்ளனர்.

அந்த வகையில், ஊட்டி மலை ரெயிலில் பயணிப்பதற்கான காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவுக்காக கூட்டம் அலைமோதி வருகிறது.எனவே, சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதலாக மலை ரெயில்களை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com