

சென்னை,
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதேசமயத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது.
ஊட்டி, ஓசூர், வால்பாறை, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்காலங்களில் பெய்வது போன்று நேற்று முன்தினம் கோடை மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு கோடை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.