சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நடக்க இருக்கிறது.
சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்
Published on

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நடக்க இருக்கிறது.

ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகின்றன.

நேற்று காலை பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலை நடந்தது. அப்போது கம்பத்தடி மண்டபத்தில் வாள், கேடயத்துடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து பட்டர் ஒருவர் கையில் கேடயம், வாளுடன் இந்த திருவிளையாடல் பற்றி நடித்து காண்பித்தார். இரவில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

அங்கம் வெட்டிய லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

சோமசுந்தரரிடம் முறையிட்ட பாணன்

மதுரையை ஆண்ட குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்தான். தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மாணவர்களை எல்லாம் அங்கு அழைத்து கொண்டான். மேலும் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சி செய்தான். இதுபற்றி பாணன் சோமசுந்தரரிடம் முறையிட்டார். அதனால் இறைவன், ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்துக்கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவனது தலையையும் வெட்டினார்.. இறைவனின் இந்த திருவிளையாடல் பற்றி அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடக்கிறது. அப்போது, சுவாமிக்கு செங்கோல் கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்று மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வருவார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com