ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
Published on

ஞாயிறு கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஞாயிறு கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி போக்குவரத்து அதிகம் உள்ள சாலையை தேர்வு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சையில் மாநகராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில், போக்குவரத்து மிகுந்த பழைய கலெக்டர் அலுவலக சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து சிறுவர், சிறுமிகளுடன் ஆடி மகிழ்ந்தார்.

ஆடல், பாடல் கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகளும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஞாயிறு கொண்டாட்டத்தில் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி கொண்டாடினர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் ஆர்வத்துடன் மேடையில் ஏறி மாணவர்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் சினிமா பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை தஞ்சை மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்தபோது சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒருவர் காலில் காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து மயக்கம் அடைந்தவர்கள் முகத்தில் தண்ணீரை தெளித்து, குடிக்க தண்ணீர் கொடுத்து உதவினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com