பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி: அன்புமணி கண்டனம்

பெண்களை காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த
காவல் அதிகாரி: அன்புமணி கண்டனம்
Published on

சென்னை

பா.ம.க. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் நான்காம் படைப்பிரிவில் பெண் காவலர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதன் கட்டளையர் (கமாண்டண்ட்) செந்தில் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

கண்காணிப்பாளர் நிலை அதிகாரியான செந்தில் குமார் மீது 45 வயது பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசுப் பேருந்தில் கோவைக்கு பயணிக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்த காவலரை கல்லூரி மாணவி ஒருவர் காலணியால் அடித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாட வேண்டும் என்றால் அதற்கு காவல்துறை தான் கவசமாக இருக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்வதைப் போல காவல்துறையினரே பாலியல் தொல்லை கொடுத்தால் பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகிவிடும். தமிழ்நாட்டில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதற்கு காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். இதற்கெல்லாம் காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com