நேரில் சென்று புகார் பெறாத போலீசார் மீது நடவடிக்கை

ஆஸ்பத்திரிகளில் வழக்கு தகவல் பெறப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரித்து புகார் மனு பெறாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்துள்ளார்.
நேரில் சென்று புகார் பெறாத போலீசார் மீது நடவடிக்கை
Published on

ஆஸ்பத்திரிகளில் வழக்கு தகவல் பெறப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரித்து புகார் மனு பெறாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரித்துள்ளார்.

மருத்துவம் சார்ந்த வழக்குகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவம் சார்ந்த சிகிச்சை மற்றும் மருத்துவ வழக்கு சார்ந்த சிகிச்சைக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி என மருத்துவம் சார்ந்த சிகிச்சை தவிர மருத்துவ வழக்கு சார்ந்த சிகிச்சைக்கு வருபவர்கள் குறிப்பாக சாலை விபத்து, அடிதடி, தற்கொலை முயற்சி, கொலை, விஷம் அருந்துதல், தூக்கிட்டு கொள்ளுதல், கற்பழிப்பு, தீக்காயம், நீரில் மூழ்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்தால் அவர்கள் குறித்த விவரங்களை ஆஸ்பத்திரிகளில் விபத்து பதிவேடு ஆவணத்தில் பதிவு செய்வது வழக்கம். இவ்வாறு பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்தும், அங்குள்ள புறக்காவல் நிலையங்களில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆஸ்பத்திரியில் மேற்கண்ட பிரிவுகளில் யாரும் பாதிக்கப்பட்டு வந்திருந்தால் அவர்களின் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விவரம் தெரிவிக்கப்படுவது நடைமுறை. இவ்வாறு விவரம் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உடன் இருப்பவர்களிடம் விவரங்களை புகார் மனுவாக பெற்று அதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்வார்கள்.

நேரில் விசாரணை

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து விபத்து பதிவேடு குறித்து போலீசாருக்கு அறிவிப்பு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று புகார் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்து பதிவேடு குறித்து விவரம் பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணை பெற்று அவர்களை போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து புகார் பெறுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை போலீசாருக்கான கூட்டத்தில் கூறியதாவது:- விபத்து பதிவேடு குறித்து தகவல் வந்ததும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் நேரில் சென்றுதான் விவரங்களை பெற்று வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவரின் உண்மை நிலை தெரியும். உடன் இருப்பவர்கள் வந்து கூறும் தகவலை வைத்து வழக்குப்பதிவு செய்தால் விசாரணையில் சிக்கல் ஏற்படும். அது சட்டப்படி குற்றமாகும்.

கடும் நடவடிக்கை

எனவே, போலீசார் எவ்வளவு நேரமானாலும் நேரில் சென்று விசாரித்து புகார் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் தர முடியாத நிலையில் இருந்தால் உடன் இருப்பவர் முன்னிலையில் போலீசார் எழுதி அதனை வாசித்து காட்டி கையொப்பம் பெற வேண்டும். இதனை மீறி போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து புகார் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று கடமையை செய்யாத போலீசார் குறித்து தகவல் பெறப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com