சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் மீது சரமாரி தாக்குதல்

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகனை, தற்போதைய பா.ம.க. ஊராட்சி மன்ற தலைவர் மகன் சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் மீது சரமாரி தாக்குதல்
Published on

சூப்பர் மார்க்கெட்

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.வி.எஸ்.ரங்கநாதன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 39). ஊனமாஞ்சேரி திருவள்ளூவர் நகரில் வசித்துவரும் இவர், கொளப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.

நேற்று காலை இவரது சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த பா.ம.க.வைச் சேர்ந்த ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனின் மகன் சந்திரகாசன், கடையில் இருந்த ஜெயக்குமாரை கையால் சரமாரியாக தாக்கினார். மேலும் ஜெயக்குமாரை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து போட்டு கடை வாசலிலும் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

வீடியோ வைரல்

இந்த காட்சிகள் அனைத்தும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயக்குமாருக்கும், ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனுக்கும் சாலையில் தனித்தனியாக காரில் செல்லும் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மகேந்திரன் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் ஏற்கனவே இருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாரை சந்திரகாசன் தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com