

சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.
த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும், அக்கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காதது சர்ச்சையானது. இந்த நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.
ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன். தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார்.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.