

சென்னை,
தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர். இவர்கள் 4 பேரையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதையடுத்து இந்த 4 மாவட்ட நீதிபதிகளையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பரிந்துரை செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிசீலனை செய்தது.
பின்னர், 4 மாவட்ட நீதிபதிகள் ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள். அவர்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புகளை ஆய்வு செய்ததில், மிகவும் திறமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே, 4 பேரையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து பரிந்துரை செய்துள்ளது.
மேலும், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அந்த பரிந்துரையில், ஐகோர்ட்டு வக்கீலாக இருக்கும் ஆர்.நீலகண்டன் என்பவரை ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். அவரைவிட மாவட்ட நீதிபதி கே.ராஜசேகர் வயதில் குறைந்தவர். எனவே, கே.ராஜசேகரை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு முன்பு வக்கீல் ஆர்.நீலகண்டனை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கருத்து தெரிவித்துள்ளது.