திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி - எல்.முருகன் வரவேற்பு

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும் என்று எல். முருகன் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன்
எல். முருகன்
Published on: 

சென்னை,

திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளதை எல். முருகன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக, பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கார்த்திகை தீபம்

பக்தர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது…! தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி வழங்கியுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இடைக்கால உத்தரவு

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பல்வேறு குழப்பமான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றை ஏற்காமல் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆண்டு இந்துக்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதல் கைகூடியுள்ளது.

நன்றிகள்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பெறுவதற்காக போராடிய, வாதாடிய அனைவருக்கும், ஒத்துழைப்பு நல்கிய நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறை நம்பிக்கையும், வழிபாட்டு உரிமையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளாகும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும். அந்த வகையில், பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்றுவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் கடமை

கார்த்திகை தீபத் திருநாள் என்பது தமிழர்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்துடன் பின்னி பிணைந்த திருவிழாவாகும். இத்தகைய புனிதமான நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

தமிழக அரசின் பொறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் இதுவரை செய்து வந்த இடையூறுகளை இனிமேலாவது தவெக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை முழுமையாகவும், காலதாமதமின்றியும் நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும்.

வழிபாட்டு உரிமை

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அதே நேரத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு மதிப்பளித்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.

முழு ஒத்துழைப்பு

வரும் நவம்பர் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குத் தமிழக அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவை மதிப்பதும், மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பதும் ஜனநாயக அரசின் கடமையாகும். அந்த கடமையை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X