புதுவை சட்டக்கல்லூரி முன்மாதிரியான சட்ட பல்கலைக்கழகமாக மாறவேண்டும்

புதுவை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி முன் மாதிரியான சட்ட பல்கலைக்கழகமாக மாறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்
புதுவை சட்டக்கல்லூரி முன்மாதிரியான சட்ட பல்கலைக்கழகமாக மாறவேண்டும்
Published on

காலாப்பட்டு

புதுவை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி முன் மாதிரியான சட்ட பல்கலைக்கழகமாக மாறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொன்விழா

புதுவை காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கி வைத்தார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றினார். தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் வரவேற்றார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் நோக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பெண்கள் அதிகளவில் கவர்னராக நியமிக்கப்பட்டது புதுச்சேரியில் தான். விடுதலை போராட்ட வீரர்களான மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த மண் புதுச்சேரி.

சட்ட பல்கலைக்கழகம்

புதுவை சட்டக்கல்லூரியில் படித்த 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது 6 பேர் நீதிபதியாக உள்ளனர். 100 பேர் சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி பதவிகளில் இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் 1,600 சட்டக்கல்லூரிகள் உள்ளன. 400 பல்கலைக்கழகங்களுடன் இந்த கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சட்டம் படித்து வருகிறார்கள்.

இவர்களில் எத்தனை பேர்களால் மாவட்ட நீதிபதிகளாகவோ, ஐகோர்ட்டு நீதிபதி களாகவோ ஆக முடிகிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் புதுவை சட்டக்கல்லூரியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த கல்லூரி ஒரு முன்மாதிரியான சட்ட பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.

ரங்கசாமி

விழாவில் பொன்விழா ஆண்டு தூணை திறந்து வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவை பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகே சிறிய இடத்தில் இந்த கல்லூரி தொடங்கி நடத்தப்பட்டது. இப்போது 28 ஏக்கர் நிலத்தில் அழகிய சிறந்த கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் இயங்குகிறது. பழைய கல்லூரியில் நான் படிக்கும்போது ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிக்கும். அப்போது வெளியே வந்து சாலையோர டீக்கடையில் டீ குடிக்க செல்வோம்.

படித்த கல்லூரிக்கு இடம் ஒதுக்கி கட்டிடம் கட்டி முடித்து திறந்து வைத்தது என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்போது முதல்-அமைச்சராக இருந்து கல்லூரியின் பொன்விழாவிலும் கலந்துகொண்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த கல்லூரியில் படித்தவர்கள் எத்தனையோ பேர் சென்னையில் நீதிபதிகளாக இருப்பது நமக்கு கிடைத்த பெருமை. இந்த கல்லூரியில் படித்தவர்கள் சிறந்த வக்கீல் களாகவும் உருவாகி உள்ளனர். சிறிய இடத்தில் செயல்பட்டபோதே சிறந்த நீதிபதிகளையும், வக்கீல்களையும் இந்த கல்லூரி உருவாக்கி கொடுத்துள்ளது.

அச்சம் தேவையில்லை

இப்போது நல்ல வசதி யுடன் இருக்கும் கல்லூரியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த நீதிபதி களாகவும், வக்கீல்களாகவும் வரவேண்டும். இந்த கல்லூரியை பல்கலைக்கழகமாக கொண்டுவர வேண்டும் என்று கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்னிடம் கூறியிருந்தார்.

பல்கலைக்கழகமாக மாறினால் புதுவை மாணவர் களுக்கு வாய்ப்பு கிடைக்காது, கட்டணம் உயர்ந்துவிடும் என்ற எண்ணம் மாணவர்களிடம் உள்ளது. எங்கள் அரசு கல்விக்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி செலவு செய்கிறது. உயர்கல்வி வரை இலவச கல்வி அளிக்கிறது என்பது மாணவர்களுக்கு தெரியும்.

இது பல்கலைக்கழகமாக மாறும்போது புதுவை மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும். வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து படிப்பார்கள். இதன் மூலம் நமக்கு மேலும் வளர்ச்சி ஏற்படும். எனவே மாணவர்கள் இதில் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com