

சென்னை
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது. இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதில், பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய தடை இல்லை என்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
சபரிமலை கோவில் வழக்கில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தை கொண்டுள்ளனர். பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தில் வேறுபாடு உள்ளது.அவர் தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார். ஐந்து நீதிபதிகளில் அவர் தனி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து பலவேறு பிரபலங்கள் தங்கள் கருத்தை தெரிவித்து உள்ளனர் அதன் விவரம் வருமாறு:-
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது என நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறி உள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறும் போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு என கூறி உள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறதுஎன சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் கூரி உள்ளார்.
சபரிமலையில் பெண்ணுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மதுரை ஆதீனம் கூறி உள்ளார்.
ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும்!- இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், கூறி உள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்; இந்திய நீதித்துறையில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் கூறி உள்ளார்