பெண்ணையாறு நதிநீர் தீர்விற்கு மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

தமிழக நீர் உரிமையை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சருக்கும், நீர் பாசன துறைக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பெண்ணையாறு நதிநீர் தீர்விற்கு மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
Published on

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகத்திலிருந்து வரும் பெண்ணையாறு மூலம், தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் பாசனம் பெறுவதுடன், குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. இந்த நிலையில் தான் கடந்த பல ஆண்டுகளாக பெண்ணையாற்றின் குறுக்கே சட்டத்திற்கு புறம்பாக... சர்வதேச நீர் பங்கீட்டு முறைகளுக்கு எதிராக பல தடுப்பணைகள் மற்றும் படுக்கை அணைகளை கட்டி தன் பாசனப் பகுதிகளை கர்நாடக அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பெண்ணையாற்றின் கிளையான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்க்கோல் கிராமத்துக்கு அருகே சட்டத்துக்கு புறம்பாக மதில் சுவருடன் ஒரு அணையை கட்டி வருகிறது. இது பூர்த்தியானால் மேற்கண்ட மாவட்ட மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும். கீழ்நிலை வடிகால் பகுதிகளுக்கே முன்னுரிமை என்ற சர்வதேச நிலைப்பாட்டை கர்நாடகம் மீறுவதும்... மத்திய அரசு தலையிடாத நிலையில் தான் தமிழ்நாடு அரசு, கடந்த 18.5.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டில் இதற்கான வழக்கை தாக்கல் செய்தது.

விசாரணைக்கு பின்னர் தான், பெண்ணையாறு நதி நீர் பிரச்சினையின் தீர்விற்கு நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு 14.11.2019 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், கர்நாடகத்துக்கு சாதகமாக இருக்கும் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது. இந்த நிலையில் தான் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், எந்த சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டதோ.... அதே நீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு 21.1.2024 அன்று உத்தரவிடுகிறது.

பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீரை முற்றாக தடுத்து கட்டப்பட்டிருக்கிற அணைகளைப் பற்றி ஆய்வு செய்யாது, தேக்கப்படும் தண்ணீரில் 15 சதவீதம் மட்டுமே வழங்கிட அக்குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை கொடுத்தது. இந்த நிலையில் தான், இக்குழு மூலம் தமிழகத்திற்குரிய நியாயம் கிடைக்காது என்பதுடன், காலதாமதத்திற்கும், கர்நாடக அரசின் புதிய அணை கட்டுமானங்களுக்கும் இது வழிகோலும் என்று தமிழக அரசு கருதியது நியாயமானது. ஆகவே இதில் தமிழ்நாடு அரசு முன்னர் தாக்கல் செய்த வழக்கின்படி, தீர்ப்பாயம் அமைத்திட வேண்டுமென 15.3.2025 அன்று முறையிட்டதுடன், 12.12.25 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மீள்முறையீட்டை தாக்கல் செய்தது.

தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காத நிலையில் தமிழக அரசு உடனே இதில் நடவடிக்கை எடுத்துள்ளதை அப்போதே பாராட்டினோம். இதன் விசாரணைக்கு பின் தான் 2.2.2026 அன்று பெண்ணையாறு நதி நீர் தீர்விற்கு மத்திய அரசு ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்திட வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். தமிழக நீர் உரிமையை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சருக்கும், நீர் பாசன துறைக்கும் நன்றி கூறுகிறோம். மத்திய அரசின் தொடர் புறக்கணிப்பை தவிர்த்து, கீழ்ப்பாசன உரிமைக்கு தடங்கல் இல்லாது தமிழக மக்களின் பாதுகாப்பை கருதி உடனடியாக மத்திய அரசு தீர்ப்பாயம் அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com