கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Published on

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 ஆயிரம் நிவாரணம்

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பங்கையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நேற்று வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக தற்போதைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றினால்தான் இறந்ததாக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டே ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட பின்பும், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை இந்த அரசு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமான வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்காதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரத்தை வழங்கக்கூட தி.மு.க. அரசுக்கு இயலவில்லை என்றால், அரசின் திறமையின்மையை, இந்த அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இனியும் காலதாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com