

சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று தொண்டர்கள் குவிந்தனர். அப்போது அவர்கள் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் தொண்டர்கள் பலர் லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் 'எடப்பாடியார் வாழ்க...', 'எடப்பாடியார் வாழ்க...' என்று தொண்டர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். சிலர் ஆர்வ மிகுதியால் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு இனிப்பு ஊட்டுவது போல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதனால் அவ்வை சண்முகம் சாலையில் நீண்ட நேரம் பட்டாசு சத்தத்தை கேட்க முடிந்தது. பல இடங்களில் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தன.
திருவிழா கோலம்
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் நீதி வென்றுள்ளது. தேவையில்லாதோர் இனியாவது ஒதுங்கிக்கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி எனும் ஒற்றை தலைமையில் அ.தி.மு.க. இனி வீறுநடை போட உள்ளது. இந்த வெற்றியை இன்றைக்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்'' என்றார்.
தொண்டர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருந்ததால் நேற்று அ.தி.மு.க. அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.