சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது சீமான் அறிக்கை

காவிரி நதிநீர் பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது சீமான் அறிக்கை
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி எனும் முதுமொழிக்கேற்ப பின்னிப் பிணைக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றுத்தொடர்பைக் கொண்டிருக்கிற தமிழகத்திற்கும், காவிரி நதி நீருக்குமான உறவை முறிக்கும் விதமாகக் காவிரி நீரை தமிழகத்திற்குத் தர மறுத்து கர்நாடக அரசும், மத்தியில் ஆளுகிற பா.ஜ.க. அரசும் வஞ்சித்து வருகிற சூழலில் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக நாம் நம்பி நின்ற சுப்ரீம் கோர்ட்டும் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

இத்தீர்ப்பு முடிவு காவிரி நதிநீர் உரிமையினைத் தமிழகத்திடம் இருந்து மெல்ல மெல்லப் பறித்து அதனை முழுமையாக கர்நாடகாவுக்கு உரியதாக மாற்ற முனைகிற சதிச்செயலோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

கர்நாடகத்துக்கு ஆதரவான தீர்ப்பு

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித்தீர்ப்பையோ ஒரு ஆண்டுகூடக் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதன்படி தண்ணீர் வழங்கியதுமில்லை. இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிற இத்தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து கர்நாடகா அரசு நிச்சயமாக முரண்டுபிடிக்கும்.

காவிரி ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல எனத் தீர்ப்பளித்துவிட்டு, ஒரு மாநிலத்தின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கி இருப்பது பெரும் முரணாகும். விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட பாசனப்பரப்பை 11 லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்து 14 லட்சம் ஏக்கர் வரை விரிவுபடுத்தி, காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலக் கொட்டம் அடித்து வரும் கர்நாடக அரசைக் கண்டிக்காது அவர்களுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்கியிருப்பது வருந்தத்தக்கது.

ஏமாற்றம் அளிக்கிறது

ஒட்டுமொத்தமாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி நதிநீர் உரிமையைத் தமிழர்களிடம் இருந்து பறிக்கும் பச்சைத்துரோகமாகும். தமிழக அரசு விரைந்து செயலாற்றி இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யத்தக்க வழிகள் இருக்கிறதா எனச் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து காவிரி நதிநீர் உரிமையை மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com