திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Published on

திருச்செந்தூர்,

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது.

இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தகரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com