

திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 5-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்து கோவிலில் சேரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலிருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நடை வழக்கம்போல் காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட காலபூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.