எடப்பாடி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு உபரிநீர்: பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அவகாசம் கோரியது

எடப்பாடி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு காவிரி உபரி நீர் எடுப்பது குறித்த வழக்கில் பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அவகாசம் கோரியதால், மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு உபரிநீர்: பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அவகாசம் கோரியது
Published on

மதுரை,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை கொண்டு பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக வினியோகிக்கப்படும் நீரில், உபரி நீரை குழாய் மூலமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள 4,500 ஏக்கர் நிலங்கள் பயன்படும் வகையில் கொண்டு செல்ல காவிரி நீர் பங்கீடு தொடர்பான அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காவிரி நீரை புதிதாக நிலங்களுக்கு பயன்படுத்துவது பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை தமிழக முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதியில் உள்ள நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் நடவடிக்கை உள்ளது. எனவே எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட தாலுகாக்களில் காவிரி உபரிநீரை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு பொதுப்பணித்துறையின் சிறப்பு செயலாளர் ரவீந்திரபாபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருந்ததாவது:-

சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை எனவும், குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த பகுதியில் 300 மீட்டர் ஆழத்தில் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை.

மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியமும் இதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து இந்த 4 தாலுகாக்களின் விவசாய பயன்பாட்டுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் 0.555 டி.எம்.சி. உபரி நீர் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. இது காவிரி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மேலும் இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com