80 வகையான 10 லட்சம் பறவைகள் கணக்கெடுப்பு; தமிழக வனத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80 வகையான 10 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்து உள்ளது என்று தமிழக வனத்துறை தெரிவித்து உள்ளது.
80 வகையான 10 லட்சம் பறவைகள் கணக்கெடுப்பு; தமிழக வனத்துறை நடவடிக்கை
Published on

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் முதன் முதலில் நடப்பாண்டுக்கான ஒத்திசைக்கப்பட்ட அனைத்து பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 28 மற்றும் 29 தேதிகளில் நடந்தது. குறிப்பாக சென்னை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இதில் தமிழக வனத்துறையுடன், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (பி.என்.எச்.எஸ்.), இந்திய வனவிலங்கு நிறுவனம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையம், சுமார் 45 சமூக குழுக்கள், தனியார் அமைப்புகள், சுமார் 10 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் இணைந்து பறவைகளை கணக்கெடுத்தனர்.

தமிழக தலைமை வனவிலங்கு காப்பாளர் டாக்டர் சேகர்குமார் நிராஜ் தலைமையில் திருச்சி தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், துணை இயக்குனர் டாக்டர் எஸ்.பாலச்சந்திரன், மாவட்ட வன அலுவலர்கள் உள்ளிட்ட 500 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி-கன்னியாகுமரி

கடலோர மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளில் முதன்முறையாக கிரேட்டர் பிளமிங்கோக்களும் காணப்பட்டன. குறிப்பாக கோடியக்கரையில் 40 ஆயிரம், வாலிநோக்கம் சுமார் 10 ஆயிரம், தனுஷ்கோடி 2 ஆயிரம், கன்னியாகுமரி 600 கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, கோடியக்கரை, பிச்சாவரம், அடையாறு சிற்றோடை, கலிவெளி ஏரி ஆகிய இடங்களில் சிப்பி பிடிக்கும் பறவை காணப்பட்டது.

அடையாறு சிற்றோடை, புலிகாட் குளம், கலிவெளி பெரும்பாக்கம் மற்றும் எல்காட் பகுதிகளில் காஸ்பியன், விஸ்கர்ட், கிரேட்டர் க்ரெஸ்டட் டெர்ன் போன்ற டெர்ன்கள் பறவைகள் காணப்பட்டன. கோடியக்கரை, ராமேசுவரம், புலிகாட் ஆகிய இடங்களில் சிறிய முகடு டெர்ன் வகை பறவைகள் காணப்பட்டன. கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் பிரவுன் ஹெட் குல், ஹியூக்ளின்ஸ் வகைகள் மற்றும் ஸ்லெண்டர் பில்ட் குல் வகைகள், கோடியக்கரை, ராமேசுவரம் மற்றும் புலிகாட்டில் பல்லாஸின் குல் வகை காணப்பட்டது.

10 லட்சம் பறவைகள்

பள்ளிக்கரணை மற்றும் பல நூற்றுக்கணக்கான இடங்களில் நரைத்தலை மடிவிழி பறவைகள் காணப்பட்டது. கலிவெளியில் உலகின் மிக நீளமான இடைவிடாத பறக்கும் வாடர் பார் டெயில் காட்விட் மற்றும் ரட்டி டர்ன்ஸ்டோன் வகை மற்றும் உயரமான பறக்கும் பறவை பட்டை தலை வாத்துகளும் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 28-ந்தேதி நடந்த கணக்கெடுப்பில் சுமார் 80 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் (10 லட்சம்) பறவைகள் கணக்கிடப்பட்டன.

முக்கிய வாழ்விடங்களில் மண் அடுக்குகள், சதுப்பு நிலங்கள், உப்பளங்கள், சிற்றோடைகள், முகத்துவாரங்கள் மற்றும் தடாகங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையில் சுமார் ஆயிரம் 1,076 கிலோ மீட்டர் என்றும் தெரியவந்து உள்ளது.

பறவைகளுக்கு நல்ல சூழல்

இந்தியாவின் கடற்கரையில் 15 சதவீதம் பறவைகள் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் குன்றுகள், சதுப்புநில காடுகள், சேற்று நிலங்கள், உப்பு சதுப்பு நிலங்கள், உப்பங்கழிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவை இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் செயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் உப்புத்தொட்டிகள் மற்றும் மீன்வளர்ப்பு குளங்கள் ஆகியவை வாழ்விடங்களாக இருப்பது தெரியவந்தது. புலம்பெயர்ந்த பறவைகள் தங்கும் காலம் அதன் நீர்நிலைகளை பொறுத்து அமைகிறது.

செழிக்கும் மழையால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகள் வெற்றிகரமான நல்ல சூழல் அமைப்புகளை பறவைகளுக்கு வளர்த்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com