

உத்தமபாளையம்:
கூலித்தொழிலாளி
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
முனியம்மாள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வந்தார்.
அவர் மீது சந்தேகப்பட்டு, வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சந்திரன் கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள துக்க வீட்டுக்கு செல்வதற்காக மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சந்திரன் கூறினார்.
ஆனால் முனியம்மாள் வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். அவர், மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் ஜீப்புக்காக காத்திருந்தார்.
அங்கு வந்த சந்திரன் மனைவியிடம் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. அவர் அதை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தார்.
இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சந்திரன் தப்பியோடிவிட்டார்.
கைது
இதுகுறித்து தகவலறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரந்து வந்தனர். பின்னர் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
பின்பு வீட்டில் இருந்த சந்திரனை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.