

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளை அடுத்த அணைக்கரை மீன் மார்க்கெட் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (38 வயது). இவரது மனைவி அகிலா (28 வயது). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 7 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தையும், 2 வயதில் ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அன்பரசன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த அகிலாவின் தலையில் கிரைண்டர் குழவிக்கல்லை அன்பசரன் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அகிலா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்பரசனை கைது செய்தனர்.