

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் தீவிரமாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. கோடம்பாக்கம் மண்டலம் பனகல் பார்க் பகுதியில் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை நேற்று மேயர் பிரியா ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலகுழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. எழும்பூர் பகுதியில் 27 வாகனங்களும், கோடம்பாக்கம் பகுதியில் 10 வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஷெனாய் நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்படுகிறது. அப்புறப்படுத்தப்படும் வாகனங்களை உரிமைகோர ஆட்கள் வரவில்லை என்றால் அவற்றை ஏலத்தில் விட உள்ளோம். மழைநீர் வடிகால் பணிகளை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.