

சென்னை,
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து இன்று ஓய்வுபெறும் டி.ஜி.பி. திரிபாதி, புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வுபெறும் டி.ஜி.பி. திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது. இன்று பதிவியேற்றுள்ள டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிற்கு காவல்துறை அதிகாரிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு, முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் டி.ஜி.பி.யாக பதவியேற்றதில் மகிழ்ச்சி என்றும் தமிழகத்தில் குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு, கடந்த 1987 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி சைலேந்திர பாபு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் விருது, வீரதீர செயலுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை சைலேந்திர பாபு வென்றவர். கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள சைலேந்திர பாபு சென்னை அடையாறில் துணை ஆணையராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.