

திருச்சி,
தமிழகம் முழுவதுமுள்ள 52 கோவில்களில், பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டது.
இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஒரு சில கோவில்களில் டோக்கன் கொடுக்கும் இடத்தில், சில்லரை தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்தநிலையில் திருச்சியில் உள்ள 5 பிரதான கோவில்களிலும், செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பாதுகாப்பு அறை லாக்கரில் செல்போன்களை வைத்து, டோக்கன் மட்டும் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.