தை அமாவாசை; புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்

இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டு வருகின்றனர்.
தை அமாவாசை; புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்
Published on

சென்னை,

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான். அதில் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அமாவாசையில் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் தை அமாவாசையில் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததிற்கு சமம் என்பது நம்பிக்கை.

ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள புனித நீர்நிலைகளில் நீராட திரளான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, பூம்புகார், திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com