

சென்னை,
எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது;
தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.
ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.