“ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்” விஜயகாந்த்

ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசினார். #Vijayakanth
“ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்” விஜயகாந்த்
Published on

சிவகாசி,

பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசினார்.

பட்டாசு தொழிலை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பாவடி தோப்பு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் செய்யது காஜாசெரீப் வரவேற்று பேசினார். கட்சியின் மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், மோகன்ராஜ், இளங்கோ, பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

பட்டாசு தொழிலில் 8 லட்சம் பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்சினை உருவாகி உள்ளது. இந்த பிரச்சினையில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த தான் நான் இங்கு வந்துள்ளேன். பட்டாசு நல வாரியம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினையை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. சீன பட்டாசுகளை இறக்குமதி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழலை காரணம் காட்டி கலாசாரத்தை நாம் இழக்க கூடாது. அம்மா வழி, அம்மா வழி என்று கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதில் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுகை தொகை வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் பின்னர் தான் தமிழக அரசு அந்த பிரச்சினையில் கவனம் செலுத்த தொடங்கியது. தற்போது பஸ் கட்டணத்தை அரசு கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை தே.மு.தி.க. நடத்தும்.

இடையில் வந்த இ.பி.எஸ். இடையில் சென்று விடுவார். ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பு இழப்பு ஆகியவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் விஜயகாந்த் தான். அதே போல் தான் தற்போது பட்டாசு பிரச்சினைக்கும் விஜயகாந்த் சிவகாசிக்கே வந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். மற்ற மாவட்டங்களை விட விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்துக்கு ஆதரவாளர்கள் அதிகம். ஒவ்வொரு தேர்தலின் போதும் அது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

ரூ.100, சோறு, பீர் கொடுத்தால் தான் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு தற்போது தொண்டர்கள் வருகிறார்கள். ஆனால் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் கடல் போல் மக்கள் வந்து இருக்கிறார்கள். சிவகாசி பட்டாசுக்கு தடை விதித்தால் அந்த ஒரு தொழில் மட்டும் பாதிக்காது. அந்த தொழிலோடு சேர்ந்து இருக்கும் 106 தொழில்களும் பாதிக்கும். ஏற்கனவே தமிழகத்தில் விவசாயம், நெசவு தொழில் இல்லாமல் போய்விட்டது. அதை நம்பி இருந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இப்போது பட்டாசு தொழிலுக்கும் பாதிப்பு என்றால் மக்கள் என்னதான் செய்வார்கள்.

தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டன. விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா அறிவித்த எந்த திட்டமாவது செயல்பாட்டுக்கு வந்துள்ளதா, பஸ் கட்டண உயர்வு தற்போது தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சுதீஷ், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை தமிழகத்தில் விற்பனை செய்தால் மணல் கொள்ளையர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அந்த மணல் விற்பனைக்கு சிலர் தடை போடுகிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com