

சென்னை,
தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, 11.07.26 அன்று மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள கூரியர் நிலையத்திற்கு மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் வந்திருப்பதாக தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பார்சலை வாங்குவதற்காக வந்த குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீஸ்ரீ என்பவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். விசாரணையில், பார்சலில் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 'Tapentadol' போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலைய போலீசார், காசிமேடு காவல் நிலையத்தின் 'பி' பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, ரூ. 60,000 ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டம் (NDPS Act)-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தாம்பரம் மாநகர காவல்துறை, நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.