

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள இல்லத்தில் வைத்து கே.பி.முனுசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 11-ந்தேதி நடராஜன் தஞ்சையில் பொங்கல் திருவிழாவின் போது மறைந்த ஜெயலலிதா அவர்களை பற்றியும், அ.தி.மு.க. பற்றியும், என்னை பற்றியும் தவறான கருத்துக்களை கூறி இருக்கிறார். இது கண்டிக்கதக்க செயல். இதற்கு பதில் செல்லக் கூடிய கடமை எனக்கு இருக்கிறது.
ஜெயலலிதா அவர்கள் நடராஜனை எந்த நிலையில் வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும் தி.மு.க. நிர்வாகிகளுடன் அரசியல் தொடர்பு வைத்திருந்தால் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கி விடுவார் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எல்லாம் அப்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
பொங்கல் விழாவின் போது நடராஜன் அ.தி.மு.க.வை 33 ஆண்டுகளாக தோளில் வைத்து சுமந்திருந்தோம் என்றார்.
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கும் போது கட்சியில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். அவர் மறைவின் போது 1 கோடியே 50 லட்சம் தொண்டர்களை உருவாக்கி கொடுத்தார்கள். அம்மாவை பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடராஜன் கூறி வருகிறார். அ.தி.மு.க. எங்கள் கட்சி, எங்கள் சொத்து என்கிறார்.
அவருடைய பாட்டன் சம்பாதித்த சொத்து அல்ல. அ.தி.மு.க. 1 கோடியே 50 லட்சம் தொண்டர்களுடைய சொத்து.எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் விலகியபோது நாங்கள் அந்த காலத்தில் கூட்டம் போட்டால் கையில் காசு இல்லாவிட்டாலும் கூட வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து கூட்டத்தை சந்தோசமாக நடத்தினோம்.
என்னை பற்றி சில அமைச்சர்கள் பேசி இருக்கிறார்கள். நான் நக்சல் இயக்கத்தில் இருந்ததாக கூறி உள்ளனர். இது அபாண்டான குற்றச்சாட்டு. நடராஜன் போயஸ் கார்டனை தன்னுடைய சொத்து என்று கூறி உள்ளார். இதுவும் அபாண்டமான பொய்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது 10-க்கும் மேற்பட்ட தடவை ஜெயலலிதா வந்திருக்கிறார். அப்போது நாங்கள் கட்சி சம்பந்தமாக பல தடவை சந்தித்து பேசி இருக்கிறோம்.
2011-ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது முதல் தடவையாக போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து பேசினேன்.ஜெயலலிதா இருக்கும் வரை போயஸ் கார்டன் இருக்கும் திசை பக்கமே நடராஜன் மற்றும் திவாகரன் வரவில்லை. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நடராஜனும் சேர்ந்து கட்சியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இதில் கழக பொதுச்செயலாளர் நேரடியாக தலையிட்டு இவர்களுடைய செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.ஜல்லிக்கட்டுக்கு மிகப் பெரிய அறப்போட்டம் நடைபெற்றது. இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் இது.இந்த போராட்டத்தின் மன நிலையை நன்கு அறிந்த முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
தம்பிதுரை தனியாக எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு சென்று பார்க்கிறார்.முதல்-அமைச்சருடன் தம்பிதுரை செல்லாமல் ஏன்? தனியாக செல்கிறார். அம்மா இருந்திருந்தால் இந்த மாதிரி போவாரா? பிரதமர் தமிழகத்தில் நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். தம்பிதுரையும் நடராஜனும் தான் பிரதமரை குறை கூறி வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.