இலங்கை அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் - சீமான்

இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.2026 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது.

சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றி வரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை.

இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.

சிங்கள ராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை.

ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும்.

தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com