'தமிழ் அழகானது உங்கள் மனதுதான் அழுக்கானது' - வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்


தமிழ் அழகானது உங்கள் மனதுதான் அழுக்கானது - வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
x
தினத்தந்தி 5 Jun 2025 3:59 PM IST (Updated: 5 Jun 2025 4:08 PM IST)
t-max-icont-min-icon

விஜய்யை குழந்தைகள் அண்ணா என அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு த.வெ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய்யை குழந்தைகள் அண்ணா என அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகனின் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துகளில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன். தமிழ் அழகானது உங்கள் மனதுதான் அழுக்கானது. குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு.

ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும். தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் அல்ல, மனித நேயமும் அல்ல. வேல்முருகனின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story