தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் அப்பாவிகள் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது மனித நேயமற்ற முறையில் தாக்குதல் நடத்தும் சிரியா மற்றும் ரஷியா அரசுகளையும், இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தாத ஐ.நா. சபையின் போக்கையும் கண்டித்து சென்னையில் உள்ள ஐ.நா. சபையின் அலுவலகம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மே 18 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா, ரஷியா அரசுகள் மற்றும் ஐ.நா. சபைக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, கூட்டத்தினரிடையே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிரியா விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து, தாக்குதலை நிறுத்த சிரியா அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், இலங்கையில் கொல்லப்பட்ட பாலசந்திரன் போன்று தற்போது சிரியாவில் நூற்றுக்கணக்கான பாலசந்திரன்கள் கொல்லப்படுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com